

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பெண் பலியானதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், பணி செய்வதற்கு ஓர் ஆண்டு தடை விதித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக அமுதா சென்றார். அதைத் தொடர்ந்து 11.8.2014 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து 26 ம் தேதி இரண்டாவது அறுவை சிகிச்சையும், அடுத்த சில நாட்களில் 3-வது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் அமுதா தொடர்ந்து பலவீனமாகிக் கொண்டே சென்றார்.
பின்னர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அமுதாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், தவறான சிகிச்சையால் கல்லீரல் உட்பட உடலின் பல பாகங் கள் கெட்டுவிட்டதாக தெரிவித்தனர். வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அமுதாவுக்கு 10 மாதங்களாக டியூப் வழியாக திரவ உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து பரிதாபமாக உயிரையும் இழந்தார்.
தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டரின் தவறான சிகிச்சையால்தான் அமுதா இறந்தார் என்று தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அவரது கணவர் கவுரி சங்கர் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் நீதி மன்ற உத்தரவின்பேரில் டாக்டர் மாறன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் கவுரி சங்கர் புகார் அனுப்பினார்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர், டாக்டர் மாறன் மீதான புகார்களை விசாரித்து, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து டாக்டர் மாறன் டாக்டர் பணி செய்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. மருத்துவ பதிவேட்டில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டது.