

நீலகிரி மாவட்டத்தில் 7,24,748 மக்கள் வசிக்கின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,21,060 நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமும் நீலகிரி மாவட்டம் தான். இங்கு தோடர், கோத்தர், பணியர் உட்பட 6 வகை பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கரோனா நோய் தொற்று பரவியது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம்உள்ள 27,500 பழங்குடியின மக்களில் 18 வயது பூர்த்தியடைந்த 21,800 நபர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் முன்னுதாரண மாவட்டமாக உருவானது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தமிழகத்திலேயே 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. கடந்த 12-ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29,760 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் மூலம் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் உதகை காந்தள், குன்னூர் உட்பட நகர், நகரையொட்டியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், பின்னர் கிராமப் பகுதிகளில் அதிவேகத்தில் தொற்றுப் பரவியது. அதிலும் குறிப்பாக, படுகர் இன மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலருக்கு ஏற்பட்ட தொற்றால் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியானது. எனவே, கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தொற்றாளர்களை தனிமைப்படுத்தினோம்.
தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த மும்முரமாக சுகாதாரத்துறை ஊழியர்களை ஈடுபடுத்தினோம். மாவட்டத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை 27,000 மட்டுமே என்பதால், அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். அவர்கள் தயக்கம் காட்டியதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மூலம், பழங்குடியின மக்களிடம் தடுப்பூசியினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை விளக்கினோம். அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தினோம். பின்னர் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தன்னார்வலர்கள், தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு செலுத்த உதவினர்.
மேலும், தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக அவர்களை அனுப்பி சளி, காய்ச்சல் உள்ளதா என கேட்டறிந்தோம். வீட்டில் உள்ளவர்களின் உடல் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. பின்னர், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்று கணக்கெடுத்தோம். மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மதுக்கடைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று அளித்தால் மட்டுமே மது விநியோகம் என அறிவித்தோம். மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்பவர்களிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டதா என கேட்டறிந்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்த முன் வந்தனர்.
தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 265 இடங்களில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 29,760 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாறிஉள்ளது. இது மிகப்பெரிய சாதனை. சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய காரணத்தினால்தான் இந்த இலக்கை அடைய முடிந்தது. இவ்வாறு ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறினார்.