

கூடலூரில் ஆற்றில் கரை ஒதுங்கியஉடலை மீட்கச் சென்றபோது, உயிரிழந்தது தனது தந்தை என்பதை அறிந்த தீயணைப்பு வீரர் அதிர்ச்சியில் உறைந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்பு பாலம் பகுதியில், ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், கூடலூர்தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் பாலமுருகன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் இரும்பு பாலம் பகுதிக்கு சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உடலை மீட்டதும், உயிரிழந்த நபர் தனது தந்தை வேலுசாமி(65) என்பதை அறிந்து, தீயணைப்பு வீரர் பாலமுருகன் கதறி அழுதார். வேலுசாமியின் உடல் கூடலூர் அரசுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸார் கூறும்போது, “கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த வேலுசாமி கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில், ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்துவிசாரணை நடக்கிறது” என்றனர்.