Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை சென்னையில் 86 சதவீதமாக உயர்வு: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதிவரை விபத்துகளில் 659 பேர் உயிரிழந்துள்ளனர். 3,325 பேருக்கு காயம்ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 26 சதவீதம் (173) பேரும், காயமடைந்தவர்களில் 37 சதவீதம் (1214) பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 74 சதவீதம் (126) பேரும் காயமடைந்த 86 சதவீதம் (1056) பேரும் தலைக்கவசம் அணியவில்லை.

இதைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள்எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்தஆய்வில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 72 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள் என்பது தெரியவந்தது.

கடந்த மாதம் முழுவதும் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 3 லட்சத்து 58,548 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதில் 1 லட்சத்து 29,240 வழக்குகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது பதியப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையின் இந்த நடவடிக்கையால், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72லிருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிந்துள்ளார்கள் என்ற நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x