

தமிழகத்தின் மிகத் தொன்மையான நகராக மதுரை திகழ்கிறது. இரவும் பகலும் உயிர்ப்புடன் இருப்பதாலேயே மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் உண்டு. மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு உருவான இந்த நகரம், கடந்த காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பண்பாடு, கலை, வாணிபம், அரசியல், மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம் என அனைத்திலும் மேம்பட்டு விளங்கியது. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஒவ்வொரு வீதிகளும் ஒவ்வொரு வகையில் வணிகச் சிறப்புடையவை.
இப்படி மலையளவு பெருமை களை மதுரை கொண்டிருந்தாலும் அதன் சாலைகள் நகரின் வளர்ச் சிக்கு மிகப்பெரிய தடையாகவும், சாபக்கேடாகவும் இருக்கின்றன. சுற்றுலாவை மையமாகக் கொண்டே மதுரையின் வளர்ச்சி அமைந்துள்ளது. ஆனால், மதுரையில் உள்ள எந்த சுற்றுலா தலத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வர முடியாதவாறு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வாகனங்களில் செல்பவர்கள், பார்க்கிங் செய்வதில் தொடங்கி சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புவதற்குள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர்.
சுருங்கும் சாலைகள்
மதுரையின் பெரும்பாலான நகரச் சாலைகள் ஒரு வழிப்பாதையாக உள்ளன. அவையும், படிப்படியாக தனியார் ஆக்கிரமிப்பால் சுருங்கிக் கொண்டே வருகின்றன. மதுரையில் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன் 120 அடி சாலை, 80 அடி சாலை, 50 அடி சாலையாக இருந்த பல சாலைகள் சுருங்கி விட்டன. உதாரணமாக சர்வேயர் காலனி 120 அடி சாலை, ஆம்னி பஸ் நிலையம் எதிரே வெறும் 20 அடி சாலையாக சுருங்கி விட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன் இந்த சாலையை புதிதாக போட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தற்போதைய நிலையிலேயே சாலை அமைத்துள்ளனர்.
மதுரை சாலைகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளன. அதிகாரிகள், சாலை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளூர் அமைச்சர்களுடன் விழாக்களில் பங்கேற்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அமைச்சர்களும், நகர சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
சிதிலமடையும் சாலைகளை புதிதாக போடாமல் வெறும் பேட்ஜ் ஒர்க் மட்டும் பார்க்கப்படு கிறது. அடுத்த மழைக்கு மீண்டும் அதே இடத்தில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. ஆளும்கட்சி யினரின் பின்னணியில் ஒப்பந்த தாரர்கள் டெண்டர் எடுப்பதால் சாலைகளின் தரத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. அதனால், சாலைகள் தரமில்லாமல் அமை கின்றன. மதுரைக்கு ஒரு முறை வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மதுரை வர தயங்குகின்றனர். அதனால், உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் உள்ளிட்ட மதுரையின் சுற்றுலா தலங்களுக்கு முன்புபோல் சுற்றுலாப் பயணிகள் வராததால் மதுரை மாநகரம் சுற்றுலா நகரம் என்ற தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பணி நிறைவு பெற்ற நெடுஞ்சாலை துறையின் தலைமை பொறியாளர் (திட்டங்கள்) ஏ.கே.ராஜதுரை வேல் பாண்டியன் கூறுகையில், ‘‘மதுரையின் போக்குவரத்துக்கு இருக்கின்ற சாலைகளே போதுமானது. பார்க்கிங் ஆக்கிரமிப்புகள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களை கட்டுப் படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். மதுரையில் இருந்த பழைய சாலைகளிலே பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதைகள் இருந்தன. ஆனால், இந்த நடைபாதைகள் எல்லாம் தற்போது நடைபாதை கடைகளாகி விட்டன.
பாரக்கிங் வசதி இல்லை
மற்ற நகரங்களை ஒப்பிடும் போது மதுரையில் ட்ரை சைக்கிள், ஷேர் ஆட்டோக்கள் அதிகம் உள்ளன. அவற்றின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாமல் கடைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவதால் சாலைகளின் 50 சதவீதப் பகுதி பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது.
சாலைகளை அகலப்படுத்தாமல் சென்டர் மீடியன் அமைத்துள் ளதால் அவற்றில் மோதி அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளா கின்றன. எனவே ஒவ்வொரு சாலையிலும் உள்ள மாநகராட்சி இடங்கள், கோயில் இடங்களில் கட்டண பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் உள்ள தொலைபேசி, மின்சார கம்பங்கள் பாதசாரிகள் செல்வதற்கு தொந்தரவாகவும், சாலைகளின் அகலம் குறுகுவதற்கும் காரணமாக உள்ளன. அனைத்து சாலைகளிலும் உள்ள மின் கம்பிகள், தொலைபேசி வயர்களை பூமிக்கடியில் கொண்டு சென்றால் சாலைகள் இன்னும் அகலமாக வாய்ப்புள்ளது.
சிம்மக்கல், பெரியார் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையம் உள்ளிட்ட நகரில் போக்குரவத்து நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுத்து அப்பகுதியில் மேம்பாலங்களையும், பறக்கும் சாலைகளையும் அமைக்கலாம். சாலைகளை மேம்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைத்து அடுத்த 5 ஆண்டுகளில் மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.