

போக்குவரத்துத் துறையே துருப்பிடித் துள்ளது. அதை சரிசெய்ய இன்னும் 3 மாதம் பிடிக்கும் என்று அத்துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆட்சி மாறும்போது தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவது உண்டு. தவறு செய்தவர்கள் மீது மட்டும்தான் குற்றச்சாட்டு எழுகிறது. குற்றவாளி இல்லை என்றால், அதை நிரூபிக்க வேண்டுமே தவிர அரசை குறை சொல்லக்கூடாது.
பேருந்தில் பெண்கள் இலவச பயணத்துக்காக தமிழக அரசு ரூ.1,400 கோடியை மானியமாக தந்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் ரூ.42,184 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. போக்குவரத்துத் துறையே துருபிடித்துள்ளது. அதை சரி செய்ய இன்னும் 3 மாதங்கள் பிடிக்கும்.
ஜெர்மனி கடனுதவியின் மூலம் 2,215 சாதாரண பேருந்துகள், 500 எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பேருந்துகளை சுத்தம் செய்யும் செலவு ரூ.68-ல் இருந்து ரூ.33 ஆக குறைத்துள்ளோம்.
நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது திமுக தான். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற சட்டப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.