

கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு சொந்தமான பால் பண்ணைகளில் இருந்த 154 பசுக்கள் நேற்று விழுப்புரத்தில் உள்ள கோ சாலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ்(51), எம்.ஆர்.சுவாமிநாதன்(48). இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள், மருதாநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் 3 பால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்த பால் பண்ணைகளில் விலையுயர்ந்த கறவை பசுக்களை வைத்து, பராமரித்து வந்தனர்.
இதனிடையே, மோசடி வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள பசுக்களுக்கு போதிய தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், அங்குள்ள பசுக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காததால், அவர்களும் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், பால்பண்ணையில் பராமரிப்பின்றி இருந்த பசுக்களை கோ சாலைக்கு மாற்ற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி கடந்த மாதம் கள ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார்.
இதன்தொடர்ச்சியாக, கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் வருவாய்த் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர், காவல் துறையினர் நேற்று பால்பண்ணைகளில் இருந்த 154 பசுக்கள், அவற்றின் கன்றுகள் ஆகியவற்றை 5 லாரிகளில் ஏற்றி, விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி மகா பெரியவர் கோ சாலை மடத்துக்கு அனுப்பி வைத்தனர்.