

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவாநகரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வசீம்அக்ரம் கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லிகுமார் ஆகிய 2 பேரை காவல் துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்த வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் உள்ளிட்ட 14 பேரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், வசீம்அக்ரம் கொலையில் தொடர்புடையதாக கூறி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் செல்வகுமார், அஜய், சத்தியசீலன், முனீஸ்வரன், பிரவீன்குமார் உட்பட 6 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரணடைந்தனர்.
அதேபோல, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த டீல் இம்தியாஸ் உட்பட 7 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வாணியம்பாடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வசீம்அக்ரம் கொலை வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த யுசூப்ஜமால், முகமது அலி, பைசல் அகமது, நயீம்பாட்ஷா ஆகிய 4 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
வசீம் அக்ரமை கொலை செய்ய கூலிப்படையினருக்கு இந்த 4 பேரும் உதவியாக இருந்ததாகவும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வசீம் அக்ரம் வரும்போது கொலையாளிகளை வரவழைத்து அவர்களுக்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி யதற்காக நயீம்பாட்ஷா உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக தனிப்படை காவல் துறையினர் தெரிவித்தனர்.