Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று முதல் கொண்டாடப்படவுள்ள சமூக நீதி தினத்தை மாற்றவும், அழிக்கவும் முடியாது: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சூளுரை

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. அருகில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று முதல் கொண்டாடப்பட உள்ள சமூக நீதி தினத்தை எதிர்காலத்தில் மாற்றவும், அழிக்கவும் முடியாது என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி வரவேற்றார்.

விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிக மிக குறைவு என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், 30 நாட்களில் 1,121 பண்ணைக் குட்டைகளை அமைத்து உலக சாதனை பட்டியலில் திருவண்ணா மலை மாவட்டத்தை இடம்பெற செய்துள்ளனர்.

முதல்வரின் ஆன்மிக தொண்டு

1 லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஒரு கால பூஜை நடைபெறும் 12 ஆயிரம் பூசாரிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் திருத்தனி முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நேற்று) தொடங்கி வைத்து. ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.

பெரியார் இல்லை என்றால் உத்தர பிரதேசம், பிஹார் போல் தமிழகம் இருந்திருக்கும். ஒரு கைத்தடியை கொண்டு, அனைவரையும் தட்டி எழுப்பிய அவரது பிறந்தநாளில், சமூக நீதி தினம் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சமூக நீதி தினத்தை எதிர்காலத்தில் யாராலும் மாற்ற முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட, அதனை அழிக்க முடியாது” என்றார்.

பின்னர் அவர், பல்வேறு துறைகள் மூலம் 244 பேருக்கு ரூ.6.89 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.73.46 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி, உணவு பொருள் தானிய கிடங்கும் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார் (வந்தவாசி), ஜோதி (செய்யாறு) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜல் ஜீவனில் குளறுபடி

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, “தி.மலை ரிங் ரோடு திட்டத்துக்கு 5 கிராம மக்களிடம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அந்த பணி நிறைவு பெற்றதும், சித்தூர் – செங்கம் சாலை விரைவாக இணைக்கப்படும்.

மேலும், தி.மலையில் நடைபெற்றும் வரும் ரயில்வே மேம்பாலம்பணியில், சர்வீஸ் சாலை அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குளறுபடி நடைபெற்றுள்ளது. அதனை சரி செய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x