

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விக்கு அப்போதைய முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவை செயல்பாடே காரணம் என்று மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் பெரும்பான்மை நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்துள்ளார். புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை தனித்தனியாகச் சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை நிர்வாகிகளைச் சந்தித்தார்.
2-வது நாளாக இன்றும் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், மாநிலத் தலைவர் மாற்றம் குறித்தும் கருத்து கேட்டு வருகிறார். அனைத்து நிர்வாகிகளையும் தனித்தனியாகக் கருத்து கேட்டறிந்து வருகிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்துவிட்டதற்கு அப்போதைய முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவை செயல்பாடே காரணம் என்று பல நிர்வாகிகள் சராமரியாக புகார் தெரிவித்துள்ளனர்.
கட்சியினருக்கு ஐந்து ஆண்டுகளில் எதையும் அமைச்சரவை செய்யவில்லை. கட்சிகளுக்காக உழைத்தோருக்கு சீட் தராத விளைவே தற்போது காங்கிரஸின் நிலைக்குக் காரணம். முதல்வராக இருந்துவிட்டு தேர்தலில் கூட நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸில் போட்டியிட்ட அமைச்சர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியைப் பலப்படுத்த தலைவரை மாற்றித் தகுதியானவரை நியமிக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
கட்சியிலிருந்து பலரும் விலகியது தொடர்பாகவும் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விவரங்களைச் சேகரித்துள்ளார். அதற்கும் அப்போதைய முதல்வரே காரணம் என்றும் பலரும் தெரிவித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. தினேஷ் குண்டுராவ் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிந்து அது தொடர்பான கோப்புகளைத் தயாரித்து கட்சித் தலைமையிடம் அளிப்பார்.
அதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக கட்சித் தலைமை முடிவு எடுக்கும். அடுத்து மாநிலத் தலைவர் பதவிக்கு தற்போதைய எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கட்சித் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.