Published : 16 Sep 2021 06:53 PM
Last Updated : 16 Sep 2021 06:53 PM

3 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் செய்யவே மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிப்பதற்காகவும், அவசர அவசரமாக ஊழல் செய்வதற்காகவும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக்கூட்டம் இன்று கூடுகிறது. கூட்டத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’சட்டப்படி நடக்க வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்று நடக்கிறது. பல ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடக்காமல் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் தவறாக ஆரம்பிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தனித் தலைவர் இருக்க வேண்டும். அதேமாதிரி மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். கவுன்சிலர்கள் ஏற்கெனவே இல்லை. எம்எல்ஏக்களை அழைத்து அவர்கள் ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்கள் கட்சி எம்எல்ஏக்களைக் கூட, இந்தத் திட்டத்திற்கான ஆலோசனைகளைக் கேட்கவில்லை. மூன்று முன்னாள் அமைச்சர்களின் சம்பாதிப்பதற்காகவும், அவசர அவசரமாக ஊழல் செய்வதற்காகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் துறையில், எப்படிக் கூடுதலாக ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையிலேயே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கியுள்ளது. அதற்குச் சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பேவர் பிளக். ஆற்று மணலைத் திருடி, எங்குமே கிடைக்காததுபோல் கற்களைக் கொண்டுவந்து சாலை போட்டுள்ளனர். அதனால், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கிற சாலைகளையும் வீணாக்கி, ஊழலுக்காக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். தேவைக்கும், ஜனநாயகத்திற்கும் முரணாக இந்தத் திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும், ஆரம்பித்த இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி எதையெல்லாம் சரிசெய்ய முடியுமோ அதைச் சரியாக்குவதற்கு கடைசிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தில் அனைத்துக் கட்டிடங்களும், சாலைகளும் தரமற்று உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கியுள்ளதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து நிதித் தணிக்கை செய்ய வேண்டும். இதில் அதிகாரிகள் மீதான முறைகேடு குறித்து ஆதாரம் இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவர்கள் திட்டமிடவில்லை. கோயிலைச் சுற்றியுள்ள போக்குவரத்தை நெரிசலையும் கட்டுப்படுத்த வேண்டும்’’.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x