Last Updated : 16 Sep, 2021 03:13 PM

 

Published : 16 Sep 2021 03:13 PM
Last Updated : 16 Sep 2021 03:13 PM

புதுவையில் வருவாய்த்துறை சான்றிதழ் பெற இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம்: புகாரின் பேரில் திடீர் சோதனை

புதுச்சேரி

வருவாய்த்துறை சான்றிதழ் பெற இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரையடுத்து, புதுச்சேரி காந்தி நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் சென்டாக் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் கலந்தாய்வின்போது வருமான வரி, சாதி மற்றும் குடியிருப்பு, குடியுரிமை உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களைப் புதிதாகப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்காக கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள், பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் புதுச்சேரி காந்தி நகரில் உள்ள உழவர்கரை தாலுக்காவுக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, உழவர்கரை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கான விஏஓ அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகவும், இல்லையெனில் சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸார் காந்தி நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று (செப்.16) திடீர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த தட்டாஞ்சாவடி, உழவர்கரை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதியைச் சேர்ந்த விஏஓக்களிடம் விசாரித்தனர். பின்னர் அங்கு சான்று பெற்றுத் தர இடைத்தரகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். ஒரு மணி நேர சோதனையில் பணமோ, இடைத்தரகர்களோ கிடைக்கவில்லை.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், ‘‘வருவாய் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், காந்தி நகரில் உள்ள விஏஓ அலுவலகங்களில் சோதனை செய்தோம்.

வருவாய்ச் சான்றிதழ் வழங்குதற்கான காலதாமதம் குறித்து விசாரித்தோம். இதற்கான காரணம் குறித்து விஏஓக்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதேபோல், புகார் வந்துள்ள மற்ற துறை அலுவலகங்களிலும் சோதனை செய்யவுள்ளோம்’’ என்றனர்.

அதே நேரத்தில் விஏஓக்கள் கூறுகையில், "காலிப் பணியிடம் அதிகமாக இருப்பதால் வேலைப்பளு அதிகம். அதனால்தான் மாணவர்களுக்குச் சான்று தர காலதாமதம் ஆகிறது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x