

திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையுடன் ரெய்டு நடத்துகிறது என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி (55). அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அமைச்சராக வலம் வந்தவர். சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை என, 5 துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஜோலார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிட்ட கே.சி.வீரமணி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தபோது கே.சி.வீரமணி, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும், தேர்தல் நடைபெறவுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.
அதிமுகவை ஒடுக்க வேண்டும், தேர்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்றக்கூடாது என்பதன் அடிப்படையில், திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையுடன் ரெய்டு நடத்துகிறது. நீதிமன்றத்தில் நிரபராதி என நிலைநாட்டுவோம்" என தெரிவித்தார்.