Published : 16 Sep 2021 01:17 PM
Last Updated : 16 Sep 2021 01:17 PM

கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அன்னதான திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர்- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"இறையருள் பெற திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது.

இதனைப் பின்பற்றி கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்கும் விதமாக, திருக்கோயில்கள் சார்பாக 44 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.

தற்போது, பழனி - தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருவரங்கம் - அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் - சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட அன்னதான திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x