Last Updated : 16 Sep, 2021 01:06 PM

 

Published : 16 Sep 2021 01:06 PM
Last Updated : 16 Sep 2021 01:06 PM

தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகை பெற தடுப்பூசி சான்று கட்டாயம் தேவை: புதுவை ஆளுநர் தமிழிசை

தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் பெற தடுப்பூசி சான்றிழ் கட்டாயம் தேவை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் சார்பில் பாகிஸ்தானை எதிர்த்து 1971-ல் வெற்றி பெற்ற 50-ம் ஆண்டு விழா, 75-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வகையிலும், தடுப்பூசியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய விமானப் படை வீரர்களை ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் தமிழிசை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நூறு சதவீத தடுப்பூசி போட திட்டமிட்டோம். அது இயலவில்லை. அக்டோபர் 2-ம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி போடுவது தொடர்பாக எம்எல்ஏக்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கரோனா தடுப்பூசி போடுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மருத்துவக் குழுவைக் கொடுத்து தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளேன். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் விடுபட்டோர் பெயரைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம்.

முழு தடுப்பூசி போட்ட மாநிலமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விடுபட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி போடவேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசு சலுகைகள், மாணவர்கள் தேர்வு எழுதுவது தொடங்கி தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் போன்றவை கிடைப்பதற்கு இனி கடுமையான பாதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதேபோல் மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம்.

தீபாவளி பண்டிகைக்கு சலுகை அறிவித்தால் அதைப் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை. இன்னும் 35 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. அதனால் தடுப்பூசி போடாமல் விடுபட்டோர் வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட உள்ளனர். குறிப்பாக ஓய்வூதியர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடாமல் இருப்போர் விவரங்களைக் கணக்கெடுப்பில் முன்னுரிமை தந்து சேகரிக்க உள்ளோம். புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் தடுப்பூசி சான்றிதழைக் கேட்கச் சொல்லியுள்ளோம்".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x