

சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழக அரசால் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.
"திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று கருணாநிதி குறிப்பிட்டார். இந்த வரலாறு இன்று நேற்றல்ல; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது ஆகும்.
1916ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்தது. 1920ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனைப் பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது.
அதில் மிக மிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. அதுதான் தமிழ்ச் சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூக நீதி அரசாணை ஆகும். 16.9.1921 அன்று நீதிக்கட்சி ஆட்சியின் முதல்வரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “அரசுப் பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்” என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதான் சமூக நீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூக நீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது.
நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார், டி.எம்.நாயர், கடலூர் ஏ.சுப்பராயலு, பனகல் அரசர், அமைச்சர் எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூக நீதிப் புரட்சிதான் தமிழ்ச் சமுதாயத்தின் லட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது. இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா. அதனால்தான், 'இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்' என்றார் தந்தை பெரியார்.
இந்த சமூக நீதி அரசாணையானது தமிழக எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன்.
திமுக அரசானது, இத்தகைய சமூக நீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழக அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள்.
சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன்.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம்."
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.