அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கே.சி.வீரமணி: கோப்புப்படம்
கே.சி.வீரமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வணிக மற்றும் பத்திரப்பதிவு துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (செப். 16) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அவரது வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது. அது போல், திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஹில்ஸ் ஓட்டலில் ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப். 16) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹில்ஸ் ஓட்டலில் சோதனை.
ஹில்ஸ் ஓட்டலில் சோதனை.

ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஓட்டல் முன்பு 20 போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in