

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொட ரில் நேற்று 110- விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிட்டார். அதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேச முயன்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
“தூத்துக்குடியிலிருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற 10 பேரை செம்மரம் கடத்தியதாக ஆந்திர காவல்துறை கைது செய்தது. அது தொடர்பாக பேரவையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்” என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் கூறினர்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, “திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்றத்துக்கு பாமகவைச் சேர்ந்த சுனிதா பாலயோகி தலைவராக உள்ளார். தமிழக அரசின் இலவச பொருட் களை வழங்குவதற்கான சீட்டுக்களை சுனிதா பாலயோகி கடந்த 18-ம் தேதி விநி யோகித்தார். ஆனால், அவரை அதிமுக வினர் விநியோகிக்க விடவில்லை. மேலும், அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இது தொடர்பாக பேசுவதற்கு அனுமதி கேட்டபோது, பேர வைத்தலைவர் கொடுக்கவில்லை. எனவே, நான் வெளிநடப்பு செய்தேன்” என்றார்.
முன்னதாக தேமுதிக-வும், திமுக-வும் சட்டப் பேரவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.