Published : 16 Sep 2021 03:11 am

Updated : 16 Sep 2021 04:35 am

 

Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 04:35 AM

நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்; மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்: வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

cm-stalin-about-neet-exam

சென்னை

நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:


மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல்நெஞ்சங் கொண்டோரைக் கரைப்போம். நீட் எனும் அநீதியை ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர்மாதம் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலை யில்தான் இப்போதும் இருக்கிறேன்.

அடுத்தடுத்த சம்பவங்கள்

கடந்த சனிக்கிழமை சேலத்தைச்சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டபோதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்து விட்டேன். இப்போதுஎனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

கல்விக் கனவை நாசமாக்குகிறது

பல குளறுபடிகளைக் கொண்டநீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்ற எண்ணத்தில்தான், இந்த அநீதி தேர்வுக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதற்கு முன்னால் நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்தத் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.

மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால்,மத்திய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.

சட்ட மசோதா நிறைவேற்றம்

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாகநீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்து வோம்.

இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி, என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் முக்கிய மானது.

உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன் றாடிக் கேட்கிறேன்.

மனநல ஆலோசனைக்கு ‘104’

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் ‘104’ என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ மாணவியர்க்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ளநலன் கொண்டவர்களாக நமதுமாணவச் செல்வங்களை வளர்த் தெடுத்தாக வேண்டும்.

பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம். ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதை விதைக்க வேண்டும். தயவு செய்து மாணவச் செல்வங்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ஆகியோரும், மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள் ளனர்.
முதல்வர் ஸ்டாலின்நீட் தேர்வுநீட் மரணங்கள்நீட் தற்கொலைகள்நீட் தேர்வு ரத்துநீட் பயம்முதல்வர் ஸ்டாலின் வீடியோCm stalinNeet examமசோதா நிறைவேற்றம்மனநல ஆலோசனைசேலம் தனுஷ் தற்கொலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x