

சிறுதாவூர் பங்களா அருகே உள்ளவி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலாவின் அக்காள் மகன் வி.என்.சுதாகரன் (ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தவர்) வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில்ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அந்தஆவணங்களை ஆய்வு செய்ததில்,பினாமிகள் பெயரில் பல ஆயிரம்கோடிக்கு சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பினாமிகளின் முழு விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துகளை வருமானவரித்துறை தொடர்ந்து முடக்கி வருகிறது.
முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவையில் உள்ள ரூ.1,600 கோடி மதிப்புள்ள 9 சொத்துகள் முடக்கப்பட்டன. 2-வது கட்டமாக போயஸ் தோட்டம்,தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.300 கோடி சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியது. 3-வது கட்டமாக கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா எனரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ளசொத்துகளை வருமானவரித் துறை அதிகாரிகள் முடக்கினர். இதில், கடந்த 8-ம் தேதி சசிகலா மற்றும் இளவரசிக்குச் சொந்தமான பையனூர் வீடு மற்றும் தோட்டம் என ரூ.100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுக்கும் செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில் உள்ளபங்களா அருகிலேயே வி.என். சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 1994-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த நிலத்தை முடக்கி வைப்பதாக, அந்த இடத்தின் சுற்றுச்சுவரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு இருப்பதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.