Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: பாமக, தேமுதிக தனித்துப் போட்டி; கூட்டணிகள் உடைகின்றன

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன. இதனால், அதிமுக மற்றும் அமமுக கூட்டணிகள் உடைகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

முதல் நாளான நேற்று 378 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமகவும் தேமுதிகவும் அறிவித்துள்ளன. இதனால், அந்தக் கட்சிகள் இடம் பெற்றிருந்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணிகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. ஆனால், அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக அளித்தது. அதன்பின் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு அமைந்த திமுக அரசுடன் இணக்கமான போக்கை பாமக கடைபிடித்து வருகிறது. இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர மற்ற 7 மாவட்டங்கள் பாமகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ள மாவட்டங்களாகும். இதனால் பாமகவின் முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை பாமக எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இடப் பங்கீடு தொடர்பாக பாஜக, தமாகாவுடன் எந்தப் பேச்சையும் அதிமுக தொடங்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணியை தொடர அதிமுகவும், தமிழகத்தில் கூட்டணி இல்லாவிட்டால் வெற்றி சாத்தியமல்ல என்பதால் அதிமுக கூட்டணியை பாஜக மற்றும் தமாகாவும் விரும்புகின்றன. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் எப்படி இடங்களை ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும். உள்ளாட்சித் தேர்தலில் அதுவும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்தாலும், ஒரு வார்டை ஒதுக்கிவிட்டு, அதே வார்டில் அவர்களும் நிற்பார்கள். அல்லது சுயேச்சை சின்னத்தில் கட்சியினரையே நிறுத்துவார்கள். எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே சரியாக இருக்கும். இது தொடர்பாக கட்சிக்குள் விவாதித்து வருகிறோம்’’ என்றார்.

அதேபோல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் 16, 17-ம் தேதிகளில் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இரு நாட்களி லும் தேமுதிக மாவட்டத் தலைமை அலுவலகங்களில் விருப்ப மனுக் களைப் பெற்று, பூர்த்தி செய்து ஒப் படைக்க வேண்டும்’ என தெரிவித் துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமகவும் தேமுதிகவும் அறிவித்துள்ளதால், அந்த கட்சிகள் இடம் பெற்றிருந்த அதிமுக, அமமுக கூட்டணிகள் உடைகின்றன.

திமுகவினருக்கு உத்தரவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பொறுப்பை மாவட்டச் செயலாளர்களிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்துபேசி, சுமுக முடிவு காண வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. அதிகமான கட்சிகள் இருப்பதால் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களை எப்படி பகிர்ந்தளிப்பது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுபற்றி திமுக தலைமை நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘எந்தெந்த பகுதிகளில், எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்குதான் தெரியும். அதனால்தான் வார்டுகள் பங்கீடு மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் சிக்கல் வருவது இயற்கைதான். ஆனால், திமுக கூட்டணி வலிமையுடன் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

9 மாவட்டங்களிலும் 80 சதவீத வார்டுகளில் திமுக போட்டியிடும் என்றும் 20 சதவீத வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x