Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம்

சென்னை

தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அவ்வப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை நேரடியாகவே மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இன்று, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருப்பதை நான் காண்கிறேன். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் மூலம் பெற்ற அனைத்து மனுக்களின் மீது நூறேநாட்களில் எடுத்த நடவடிக்கை களையும், மக்களின் வெகுநாட் களாக தீர்க்காமல் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட அணு குமுறைகளையும் கண்டு மக்கள் அளவு கடந்த நம்பிக்கையி்ன் அடிப் படையில் இங்கு குவிகின்றனர்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’என்பது சிறப்பு திட்டம். போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்தமனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. பல்லாண்டுகள் தீர்க்கப்படாமல் தேங்கியிருந்த குறைகள் களையப்பட்டன.

அதேபோன்று அனைத்து விஷயங்களிலும் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. இந்த மனுக்கள் ஏன் குவிகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய, வட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய, வட்டார அளவில் களையப்பட வேண்டிய, சிற்றூர் அளவில் செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரியகாலத்தில் செய்யாமல் இருப்பதால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகின்றனர். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்துக் கிடப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்திலும் மனுக்களின் மீதுநடவடிக்கைகளை முடுக்கிவிட்ட வர்கள் நீங்கள்தான். கோட்டையில் இருந்து கூறியதும் பிறப்பித்த ஆணையை குக்கிராம அளவிலேயே ஏன் முடிக்காமல் விட்டோம் என்பது ஆய்வுக்குட்பட்ட செய லாகும்.

மூன்று மாதங்களாகப் பட்டாமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என எனக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை தொடர்புடைய மாவட்ட ஆட்சியருக்கு அனுப் பியதும், படபடவென நடைபெற்றது பட்டா மாற்றம். பட்டா பெற்றவர் படித்து பட்டம் பெற்றபோது கூட இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டார்.

மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயேதுரிதமாக தீர்க்க முனைய வேண்டும். கனிவோடும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய தேவை எழாது. இதை மனதில் கொண்டு அனைத்துஅலுவலர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை நீ்ங்கள் ஏற்படுத்துவதுடன், தலைமைச் செயலருடைய கடிதத்தை படிக்கும் அதே ஆர்வத்துடன் தத்தளிக்கின்ற அபலையின் மனுவையும் படிப்பதில் நீங்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இலக்குகளை அடைவது மட்டுமல்ல; மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப் பணியின் ஓர்அம்சமே. விரிவான ஆய்வின்மூலம் அந்தந்த அளவிலேயே பிரச்சினைகள் தீ்ர்க்கப்படும் நடைமுறையை நீங்கள் ஏற்படுத்தினால், சமூகத் தேவைகளுக்கும், கட்டமைப்புகளுக்கும் மட்டுமே மக்கள் உங்களை நாடி வருவார்கள்.

அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் ஆட்சியருக்கு கேடயங் கள் வழங்குவதை விட குறைவான மனுக்களை தலைமைச் செயலகம்எந்த மாவட்டத்தில் இருந்து பெறுகிறதோ, அந்த மாவட்டத்துக்கு அளிக்கின்ற நடைமுறையை கொண்டுவரும் அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x