

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு கட்டாயம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற ஆதரவளித்த அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
பெண்களின் முன்னேற்றத்துக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு புதுமைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கென பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை வழங்கும் திருமண உதவித் திட்டம், தாய் சேய் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மகப்பேறு நிதி உதவித் திட்டம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம், பெண் கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகளை ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டு சட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள் ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்த் தப்பட்டால், உள்ளாட்சி அமைப்பு களில் பெண்கள் மேலும் அதிக அளவில் பங்கு பெறுவதை உறுதி செய்ய இயலும்.
அதன் அடிப்படையில், கடந்த 20-ம் தேதி அன்று சட்டப்பேரவை யில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையால் இது ஆய்வு செய்யப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றிய அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.