Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கோவை மாவட்டத்தில் பால், காய்கறி, மளிகை தவிர மற்ற கடைகள் இயங்க தடை

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கீழ்கண்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள அத்தி யாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதோடு, 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. வார சந்தைகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப் படுகிறது.

சந்தையில் வெளிமாவட்ட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை பொள்ளாச்சி சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதத்துக்கு மேல் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20-ம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், இதர கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், கரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும்.

மேலும், வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும்.

இக்கட்டுப்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x