பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு: சேலம் மாநகர காவல்துறை நடவடிக்கை

பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு மாநகர காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு பலகை. 			 படம்: எஸ்.குரு பிரசாத்
பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு மாநகர காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு பலகை. படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். காவல்துறையின் இந்நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், 68 மது அருந்தும் பார்களும் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் பலர் கடைக்கு அருகேயுள்ள சாலையோரம் அல்லது வீதியோரம் என பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

கிராமப் புறங்களில் மதுவை வாங்குவோர் அப்பகுதிகளில் உள்ள ஏரிக்கரை, வயல்வெளி, மூடப்பட்டிருக்கும் பள்ளி வளாகம், கோயில் சுற்றுப்புறங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் எதிரே உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைக்கு அருகேயுள்ள சாலைகளில் மது அருந்தி வருகின்றனர்.

இதேபோல, சேலம் சத்திரம் பகுதியில் ரயில்வே பாதையோரம் உள்ள சாலையில் திறந்தவெளியில் பலர் மது அருந்தி வருகின்றனர்.மேலும், மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நொறுக்குத் தீனி பைகள் போன்றவற்றை வீசிச் செல்கின்றனர்.

பல நேரங்களில் மது அருந்துவோருக்கு இடையில் தகராறு நடப்பதால், டாஸ்மாக் கடையுள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலையுள்ளது.

இந்நிலையில், மாநகர காவல்துறை சார்பில் டாஸ்மாக் கடை அருகில், ’பொது இடங்களில் மதுஅருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்’ என எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொது இடங்களில் மதுஅருந்துவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடை அருகில் உள்ள திறந்தவெளிகளில் மது அருந்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களில் சிலர் கூறும்போது, “மாநகர போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கையால், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகளை அச்சமின்றி கடந்து செல்ல முடிகிறது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in