மாநிலங்களின் ஆளுநர் பதவிக்கு உளவுத் துறை அதிகாரிகளை நியமிப்பதா?- மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

மாநிலங்களின் ஆளுநர் பதவிக்கு உளவுத் துறை அதிகாரிகளை நியமிப்பதா?- மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
Updated on
1 min read

ஜனநாயக மரபுகளுக்கு எதிராக உளவுத் துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் புதிய ஆளுநராக உளவுத் துறை அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வித்துறையினர், முன்னாள் நீதியரசர்கள் போன்ற அரசியல் சார்பற்றவர்களே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரான அம்பேத்கர் வாக்குறுதி அளித்தார்.

1967-க்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தபோது, அங்கெல்லாம் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின்போது அங்கு ஆளுநராக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியின்போது இந்திய உள்துறையின் செயலாளராக இருந்த சுந்தர்லால் குரானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது பின்பற்றிய இந்த வேண்டாத பழக்கத்தை பாஜக அரசும் பின்பற்றுகிறது.

ஜனநாயக மரபுகளுக்கு எதிராகவும், மாநில ஆட்சிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்குக்கு எதிராக அனைவரும் இணைந்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in