

சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்ய கூட்டுக்குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மெரினா கடற்கரையில், கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் விதிகளை மீறி மணல் திருடப்பட்டு வருகிறது. கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளின்படி, இப்பகுதியில் மணல் அள்ள அனுமதி இல்லை. இப்பகுதிக்கு லாரிகள் சென்றுவர ஏதுவாக கடற்கரை பகுதியில் கட்டிடக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இது கடற்கரை சூழலியலை கடுமையாக பாதிக்கும்.
எனவே, விதிகளை மீறி மணல் அள்ளி வரும் அடையாளம் தெரியாதவர்கள், அவர்களை மணல் அள்ள அனுமதித்த அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம், சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்வதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தொடர்புடைய பகுதியில் மணல் திருட்டு நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை கண்காணிப்புபொறியாளர், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அதிகாரி ஆகியோர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு, அப்பகுதியில் மணல் அள்ளப்பட்டுள்ளதா, மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், பாதிப்பு ஏற்பட்டிருப்பின், அதற்கான இழப்பீ்ட்டு தொகை, விதிமீறலில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வழக்கின் அடுத்த விசாரணை நாளான அக்டோபர் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.