

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் முழு அடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கக் கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனை நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் துரை மாணிக்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநில செயற்குழு உறுப்பினர் கே.வீ.இளங்கீரன், குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.
அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், “முன்பு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை அடிமைப்படுத்தியது. தற்போது வடஇந்திய கம்பெனி நாட்டை அடிமைப்படுத்தியுள்ளது. 27-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.