

ஆடுகளம் அமைப்பதற்காக மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறது ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வடுவூர் பல்நோக்கு மின்னொளி உள்விளையாட்டு அரங்கம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், இந்திய அளவில் கபடி மற்றும் தடகள விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் கிராமமாகும். இந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் இந்திய அளவில் அரசுப் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி விளையாட்டுகளைத் தேர்வு செய்து அதன்மூலம் சாதித்து வரும் வடுவூர் கிராமத்தில், ஊர் மக்கள் சார்பி்ல் வடுவூர் மேல்நிலைப் பள்ளி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்கவும், தங்களுடைய சந்ததியினரையும் விளையாட்டுத் துறையில் இறக்கி விடவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த வீரர்களைக் கொண்டு வடுவூர் விளையாட்டு அகாடமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, ஊரில் 4 ஏக்கரில் இடம் வாங்கப்பட்டது.
இந்த இடம் விளையாட்டுத் துறைக்காக வாங்கியதை அறிந்த அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன், இந்த இடத்தை பள்ளியின் பெயருக்கு மாற்றி அமைத்தால் அதன் மூலம் நிதி உதவி பெறலாம் என ஆலோசனை வழங்கியதுடன் அதுகுறித்து அரசுக்கும் பரிந்துரை செய்தார். பின்னர் 2013-ல் மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விவரம் சென்றது.
இதையடுத்து மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வடுவூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மின்னொளி உள்விளையாட்டு அரங்கத்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது.
2013-ம் ஆண்டு அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த உள்விளையாட்டு அரங்கில் கபடி, வாலிபால், டென்னிஸ், கராத்தே, கோகோ, சிலம்பம், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளையும், அரங்கின் வெளியே தடகளப் போட்டிகளையும் விளையாட முடியும்.
ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டுகளைப் பார்வையிடுவதற்கான வசதியும், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான விடுதி வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்த இந்த நிதியைக் கொண்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், தேக்கு மரத்தால் அமைக்கப்பட வேண்டிய ஆடுகளப் பணி, இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.2.25 கோடி மதிப்பிலான சில பணிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான நிதியைப் பெறுவதற்காக திட்ட மதிப்பீட்டை மத்திய அரசிடம் அனுப்பிவிட்டு காத்திருக்கின்றனர் வடுவூர் விளையாட்டு வீரர்கள்.
இதுகுறித்து வடுவூர் விளையாட்டு அகாடமி அறக்கட்டளைத் தலைவர் ராஜ.ராஜேந்திரன் கூறியபோது, “இவ்வூரில் உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் தமிழக கபடி அணியில் விளையாடியவர்கள். வடுவூரில் பெரும்பாலானோர் விளையாட்டு வீரர்கள். தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அகாடமி அறக்கட்டளையில் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது ரூ.6 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவடைந்துவிட்டது. உள் அரங்கில் நடைபெற வேண்டிய ஆடுகளம், மின்விளக்குகள் மற்றும் அரங்கின் வெளிப்பகுதியில் 200 மீ்ட்டர் ஓடுகளம், நடைப்பயிற்சிக்கான பகுதி ஆகிய பணிகள் மீதமுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். திட்ட மதிப்பீட்டை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதற்கான நிதி கிடைக்கப்பெற்றால் பணிகள் நிறைவடைந்துவிடும். எங்களின் கனவு நிறைவேறும் நாளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.