Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி :

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 80 வயதான முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நந்தன்(80). இவர், நேற்று மதியம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துதிடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை காப்பாற்றினர். பிறகு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவி அளித்து பிறகு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

முன்னதாக அரசு மருத்துவமனையில் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, நந்தன் காவலர்களிடம் கூறியதாவது, ‘நந்தனுக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் கதவாளம் பகுதியில் உள்ளது. 20ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கோயில் கட்ட அவரது நிலத்தை கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலாக வேறு இடத்தில் நிலம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தானமாக வழங்கிய நிலத்தையும் தனக்கே வழங்க வேண்டும் என நந்தன் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நிலத்தை வழங்க முடியாது எனக்கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், ராஜேந்திரன் உட்பட பலர் நந்தனை மிரட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையே, ஆம்பூர் அடுத்த உமராபாத் எல்லைக்குட்பட்ட கரும்பூர் பகுதி கிராம உதவியாளராக பணியாற்றி வரும் பாக்கியலட்சுமி என்பவருக்கும், இவருக்கும் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், பாக்கியலட்சுமி தாக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

அதில், காயமடைந்த பாக்கியலட்சுமி நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உமராபாத் காவல் துறையினர், நந்தனை அழைத்துள்ளனர். இந்த விசாரணைக்கு பயந்து தான் நந்தன் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நேற்று) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு அவர் தற்போது ஒத்துழைக்கும் நிலையில் இல்லாததால் மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x