Published : 15 Sep 2021 08:03 PM
Last Updated : 15 Sep 2021 08:03 PM

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை

எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் வெறும் தொண்டனாக இருந்து உழைத்தவர்களால்தான் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவில், விருதுகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''அன்பு உடன்பிறப்புகளே!

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே திமுக ஆட்சிக்கு வந்து முப்பெரும் விழாவைக் கொண்டாடும் என்று கூறினேன். அதேபோல நிகழ்ந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது. ஆறாவது முறையாகப் பொறுப்பேற்று இருக்கிறோம். உங்களுடைய வியர்வையால், ரத்தத்தால், உழைப்பால், தியாகத்தால் கிடைத்த வெற்றிதான் இந்த வெற்றி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் உழைத்த உழைப்பின் காரணமாகத்தான், திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.

எந்தவிதப் பதவிகளுக்கும் வராமல், எதற்கும் ஆசைப்படாமல், தொண்டன் என்ற நிலையிலிருந்து பணியாற்றிய இவர்களால்தான் இந்த ஆட்சி உருவாகியிருக்கிறது. அத்தகைய தொண்டர்களுக்கு மீண்டும் மீண்டும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டுக்கு இன்னும் சில சிறப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன. நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் நாம் என்று சொன்னார் அண்ணா. அந்த நீதிக்கட்சி 1921இல் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது. அந்த நூற்றாண்டையும் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நான் முதன்முதலாக முதல்வராகப் பொறுப்பேற்றதும் இந்த ஆண்டுதான். 1985-ல்தான் முதன்முதலாக முப்பெரும் விழா தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும். 9 மாவட்டங்களில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பிறகு வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்றுசேர, உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதத்திலும் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன''.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x