

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்துறை சார்பில் மாரியப்பனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ‘மை ஸ்டாம்ப்’ வெளியிடப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரான மாரியப்பன், 2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
தொடர்ந்து, 2-வது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுவிட்டு, சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன், தற்போது பெரியவடகம்பட்டியில் உள்ள அவரது ஊரில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
இதனிடையே, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 510 பேரிடம் இருந்து, மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து இ-போஸ்ட் வந்திருந்தது. இந்நிலையில், சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்துறை சார்பில், மாரியப்பனை கவுரவிக்கும் வகையில், அவரது படம் பொறித்த ‘மை ஸ்டாம்ப்‘ வெளியிடப்பட்டது.
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அஞ்சல்துறை அலுவலர் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர், பெரியவடகம்பட்டியில் மாரியப்பனை இன்று சந்தித்து, நாடு முழுவதும் இருந்து வாழ்த்து தெரிவித்து அனுப்பப்பட்ட 510 இ-போஸ்ட்டுகளையும், மாரியப்பன் படத்துடன் கூடிய மை ஸ்டாம்ப்பையும் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.