Last Updated : 15 Sep, 2021 06:04 PM

 

Published : 15 Sep 2021 06:04 PM
Last Updated : 15 Sep 2021 06:04 PM

சேலம் மாநகரில் பொது இடங்களில் மது அருந்தத் தடை: மாவட்டம் முழுவதும் அமல்படுத்தக் கோரிக்கை

சேலம் மாநகரில் பொது இடங்களில் மது அருந்தத் தடை விதித்து, போலீஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், 68 மது அருந்தும் பார்களும் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார்கள் அனைத்தும் மூடப்பட்டன. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டும் தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நகரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களில் பலர், கடை அமைந்துள்ள பகுதியிலேயே சாலையோரம் அல்லது வீதியோரம், அண்டையில் உள்ள கடை வாசல் எனக் கிடைத்த இடத்தில் அமர்ந்து, மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களோ மதுவை வாங்கிச் சென்று ஏரிக்கரை, வயல்வெளி, மூடப்பட்டிருக்கும் பள்ளி வளாகம், கோயில் சுற்றுப்புறங்களிலும் கூட, எவர் குறித்த அச்சமுமின்றி, சுதந்திரமாக மது அருந்தி வருகின்றனர். சேலம் மாநகரில், 60-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் பல மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகள், வீதிகளில்தான் செயல்பட்டு வருகின்றன.

உதாரணமாக, சேலம் புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் எதிரே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், பேருந்து பணிமனை, கோயில் ஆகியவையும் அடுத்தடுத்து உள்ளன. இந்த இடம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகவே இருக்கும்.

பரபரப்பான இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள், பகல் நேரத்தில், மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமலேயே சாலையோரம் அமர்ந்து, குளிர்பானம் அருந்துவதுபோல மது அருந்திக் கொண்டிருப்பார்கள். பாதாள சாக்கடை பணிப் பயன்பாட்டுக்காக, அங்கு போடப்பட்டுள்ள பெரிய குழாய்கள், மது அருந்துபவர்களுக்கு ஒரு மேஜை போல உதவியது. சேலத்தில் சத்திரம் பகுதியில் ரயில்வே பாதையோரம் உள்ள சாலை நெடுகவும் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகவே மாறியது.

மது அருந்துபவர்கள், அங்கேயே கண்ணாடி பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நொறுக்குத் தீனி பைகள் போன்றவற்றை எச்சமாக வீசிச் செல்வதும் வாடிக்கை. உடைத்து வீசப்படும் கண்ணாடி மது பாட்டில்கள் பலரின் கால்களைப் பதம் பார்த்து வருவது தனிப் பிரச்சினை.

இப்படி, பல இடங்களிலும் திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் காரசாரமாகப் பேசிக்கொள்வது, வம்பு சண்டையில் ஈடுபடுவது என அச்சமூட்டும் வகையில் செயல்படுவதால், அவ்வழியாக நடமாடும் பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் கூட அச்சத்துடன்தான் நடமாடி வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று ஏக்கத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாநகரில், பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்து, டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பாக போலீஸார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மேலும், பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பொதுமக்களில் சிலர் கூறுகையில், "மாநகர போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கையால், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகளை அச்சமின்றிக் கடந்து செல்ல முடிகிறது. சேலம் மாநகரப் பகுதிகள் மட்டுமல்லாது, சேலம் மாவட்டப் பகுதிகள் முழுவதும் இந்தத் தடையை அமல்படுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி நடமாட போலீஸார் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x