

நீட் தேர்வை ஒட்டி மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மாணவர்களே இந்த அரசை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’நீட் தேர்வை ஒட்டி வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
ஏற்கெனவே நான் கூறியபடி உடனே ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று மீண்டும் திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்றே கூறியதுபோல், மருத்துவர்தான் ஆக வேண்டும் என்று இல்லை. 42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன.
மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்
அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு
அவன் நேர்மையின் மறு பிறப்பு
என்ற பாடல் வரிகளை இங்கு நினைவுகூர்கிறேன்.
மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.