Published : 15 Sep 2021 01:31 PM
Last Updated : 15 Sep 2021 01:31 PM

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வெழுதிய மானவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

சென்னையில் இன்று (செப். 15) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"நீட் தேர்வெழுதிய அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட மாணவர்களை அழைத்து, அவர்களின் ஒப்புதல் பெற்று தொலைபேசியில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் 104 இலவச மருத்துவ சேவை மையத்தில் 24 மணிநேரமும் 40 மனநல ஆலோசகர்களை கொண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே நிலவும் மன அழுத்தம், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வாக இது அமையும். தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. இந்த ஒரு தேர்வு எதையும் பெரிதளவில் சாதித்துவிடாது. மானவர்கள் ஒரு தேர்வு இல்லையென்றால் அடுத்தத் தேர்வுக்கு முயற்சிக்கலாம். இது போன்ற பல்வேறு ஆலோசனைகள் மானவர்களுக்கு 12 வகைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகம் முழுதும் 333 மன நல ஆலோசகர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் எப்படி பேச வேண்டும், அவர்களுக்கு மன அழுத்தம் இருந்தால் எப்படி பேச வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகள், மன நல ஆலோசகர்களுக்கும் மனநல மருத்துவர்களுக்கும் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வெழுதிய மாணவர்களிடம் முதலில் பேசப்படும். 38 மாவட்டங்களிலும் இது தொடங்கப்படுகிறது.

நானும் 2-3 மாணவர்களிடம் பேசினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றனர். ஒருவர் மிகுந்த கஷ்டமாக தேர்வு இருந்தது என்றார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக மாணவர்களிடம் கூறினோம். தேர்வு குறித்த அச்சத்தை நீக்குவதற்கு இந்த மனநல ஆலோசனை தீர்வாக இருக்கும் என கருதுகிறோம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x