

தலைமைச் செயலக பணியாளர்கள் 3,645 பேருக்கு ‘இ-ஆபீஸ்’திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயிற்சியை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்களைக் கொண்டு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழகஅரசு இ-ஆபீஸ் (மின் அலுவலகம்) திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும்மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் இந்த இ-ஆபீஸ் திட்டத்தைநடைமுறைப்படுத்த அரசு தி்ட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு திறன் மற்றும் அறிவுசார் பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி 120 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இ-ஆபீஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும். பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் விரைந்து வழங்கப்படும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
மின் ஆளுமை முகமையில் நேற்று இந்த பயிற்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்னாளுமை முகமை ஆலோசகர் பி.டபிள்யூ.சி.டேவிதார், தகவல் தொழில்நுட்பவியல் செயலர் நீரஜ் மித்தல், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், மின் ஆளுமை முகமை தலைமை செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.