

`திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டத்தை நாளை (செப்.16) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியார் நிதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக ஆய்வின்போது பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் ஆலோசனை நடத்துவார். அந்தக் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். கோயிலில் அர்ச்சகர்கள் அதிகமாக இருப்பதால் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களிலும் முழுநேர அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நாளை (செப்.16) முழுநேர அன்னதானத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
ரூ.900 கோடி சொத்து மீட்பு
இன்று வரை ரூ.900 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடைபெறாத கோயில்களில் விரைவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விளாத்திகுளத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் உள்ள அர்ச்சகர் பள்ளி, உரிய வசதிகளோடு, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
ஆய்வின்போது அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கோயில் இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.