கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு
Updated on
1 min read

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின்செல்போன் உரையாடல்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம்பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாய கொலை, கூட்டுக்கொள்ளை உட்பட 13 குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜி, வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு மற்றும் சிவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4-வது நபரான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி ஆகியோர் நேரடியாக வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணை பல நாட்கள் நீடிக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது, சம்பவம் நடந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவரின் செல்போன் உரையாடல்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்காக, கோடநாடு எஸ்டேட் அருகில் உள்ள டவரில் இருந்து சென்ற அலைபேசி அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், கொள்ளை தொடர்பான பிரத்யேக குறியீடு சொற்களை பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொலை, கொள்ளை நடந்த அன்று கொலையாளிகள் சென்ற வாகனத்தை கூடலூர் அருகே உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி போலீஸ் சோதனை நடத்தியாதாகவும், அப்போது, அரசியல்வாதிகள் சிலர், போலீஸாரை தொடர்புகொண்டு அவர்களை விடுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில், அந்த நபர்களின் தொடர்பு குறித்தும் போலீஸார் ஆதாரங்களை திரட்டுவதாக தெரிகிறது.

மனோஜுக்கு ஜாமீன்

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபரான வாளையாறு மனோஜுக்கு நிபந்தனைகளைத் தளர்த்தி ஜாமீன் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in