புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

புதுச்சேரி கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் வைக்கப்பட்ட சிலைகள், பழைய நீதிமன்றம் எதிரே நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ம் தேதி கொண்டாடப்பட்டது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கியிருந்தது.

புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 240 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.

இந்நிலையில் 5-ம் நாளான நேற்று புதுச்சேரியில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த 33 பெரிய அளவிலான சிலைகள் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக மேள தாளங்களோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புதுச்சேரி கடற்கரை சாலை பழைய நீதிமன்றம் அருகே கொண்டு வரப்பட்டன. அங்கு அரசு அனுமதி அளித்த இடத்தில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீதமுள்ள சிலைகள் நாளை (செப்.16) கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in