

கோவையில் இஎம்எஸ் (எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ்) எனப்படும் ‘ஸ்பீட் போஸ்ட்’ சேவை இன்று முதல் 35-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நாட்டில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிவரும் இந்திய அஞ்சல் துறையின் கீழ், ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்கள் உள்ளன. அஞ்சல் சேவை தவிர்த்து, சரக்கு பார்சல், சிறுசேமிப்பு, அஞ்சல் வங்கி, ஆதார், தங்க காசு மற்றும் தங்க பத்திரம் விற்பனை உள்ளிட்ட சேவைகளையும் இணைத்து வழங்கி வருகிறது.
கடிதங்கள் உரிய உத்தரவாதத்துடன் விரைவாக சென்று சேரும்வகையில் ‘ஸ்பீட் போஸ்ட்’ சேவை, கோவையில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி கூட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது.
கோவை அஞ்சல் கோட்டத்தில் தற்போது 2 தலைமை அஞ்சலகங்கள், 100-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்கள் உள்ளன. அனைத்து அஞ்சலகங்களிலும் ஸ்பீட் போஸ்ட் சேவை கிடைக்கிறது. ஆனால் தொடர்பு துறை மிகவும் பின்தங்கியிருந்த அக்காலகட்டத்தில் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய சில நகரங்களில் மட்டும் இருந்த ஸ்பீட் போஸ்ட் சேவை கோவையில் தொடங்கப்பட்டது மிகவும் முக்கியமான தாக கருதப்பட்டது. இது கோவையின் தொழில் துறை வளர்ச்சிக்கு அவசிய தேவையாகவும் இருந்தது.
எத்தனை தனியார் கூரியர் சேவை நிறுவனங்கள் வந்தாலும் தொலைத்தொடர்பு வசதி இல்லாத கிராமங்களுக்கும் கூட, உரிய நேரத்தில் கடிதங்களை முறைப்படி கொண்டு சேர்க்கும் சேவையாக ஸ்பீட் போஸ்ட் உள்ளது.
இதுகுறித்து, தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் அலுவலர் நா.ஹரிஹரன் கூறியதாவது:
கோவையில் முதல் ஸ்பீட் போஸ்ட் சேவையை அப்போதைய தமிழக அஞ்சல் துறை தலைவர் பாலகுரு, கோவை மண்டல இயக்குநர் கோவிந்தராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஸ்பீட் போஸ்ட் சேவை பிரிவுக்கு அலுவலராக மணி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அக்காலகட்டத்தில் கோவையில் பிரபல மருத்துவராக இருந்த மனோகர் டேவிட் என்பவர், 3 கடிதங்களை முதன்முதலாக புக்கிங் செய்தார். தற்போது, நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலமாக கையாளப்படுகின்றன.
இது அரசு துறை சேவை என்பதால் நம்பகத்தன்மை உள்ளதோடு, வாடிக்கையாளர்கள் ‘கிளைம்’ செய்யும் உரிமை உண்டு. பிற தனியார் நிறுவனங்களைப் போல ‘டிராக் அன்ட் ட்ரேஸ்’ (கடிதங்களை பின் தொடருதல்) வசதி உள்ளது. யாரும் கொண்டு சேர்க்க முடியாத கிராமங்களுக்கும் உரிய நேரத்தில் கடிதங்கள் மக்களுக்கு சென்றடைகின்றன. சாதாரண கடிதங்களும் மக்களை சரியாக சென்றடைகின்றன. எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் மக்கள் இந்திய அஞ்சல் துறையை நம்புவதற்கு இதுவே முக்கிய காரணம்.
ஸ்பீட் போஸ்ட் சேவையை கவுரவிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறை கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி அஞ்சல் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.