

தருமபுரியில் உள்ள அனைத்து மலைக்கிராமங்களுக்கும் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எம்பி தெரிவித்தார்.
தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த, மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில், கழிப்பறைகள் இல்லாததால் குறிப்பிட்ட வயதுடைய மாணவியர் பள்ளியிலிருந்து இடைநிற்கும் சூழல் இருந்து வந்தது. இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்துவதால், இடைநிற்றலை முழுமையாக தவிர்க்கலாம். இந்த நவீன கழிப்பறைகளை, தூய்மை பணியாளரை நியமித்து பராமரிக்க வேண்டும்.
மாவட்டத்தில், பெரும்பாலான மலைக்கிராமங்களில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 6 மலைக்கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதி இல்லை. இந்த கிராமங்களுக்கும், வனத்துறையிடம் அனுமதி பெற்று விரைவில் சாலை வசதி ஏற்படுத்தித்தரப்படும். இதேபோல, தருமபுரி அரசு மருத்துவமனை பிரிவு சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. தென்மேற்கு ரயில்வேத்துறைக்கு சொந்தமான அச்சாலை, ரயில்வேத்துறை சார்பில் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறி அதனை செப்பனிடப்படாமல் வைத்துள்ளனர். இச்சாலையை அமைக்க ரூ.80 லட்சம் நிதி தேவைப்படும். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, சாலை அமைக்க தேவைப்படும் நிதியில் 20 சதவீதம் நகராட்சி நிதியும், மீதமுள்ள நிதி பொது நிதியிலிருந்தும் ஒதுக்கீடு செய்து விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.