

கடற்கரைகளில் தனியார் முதலீட்டில் நீர் விளையாட்டுகள், துறைமுகங்களுக்கு சிறிய கப்பலில் உல்லாசப் பயணம் ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு கடல் சார் வாரிய ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் 93-வது கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
கடற்கரைகளையும், கடல் அலைகளையும், பரந்து விரிந்துள்ள நீலக்கடலையும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய நீர் விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரைப் பகுதிகளில் அமைத்துக் கொடுத்தால் மக்கள் மேலும் உற்சாகமடைவார்கள். கடலின் தன்மைக்கு ஏற்ப எங்கெல்லாம் படகு போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் படகு போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம்.
தற்போதைய அரசின் நிதி நிலைமை இதற்கேற்ப இருக்குமா என்பது சந்தேகமே. வெளிநாடுகளில் உள்ளது போன்ற நீர் விளையாட்டுகள் போட்டிங் போன்றவற்றை தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கடல் நீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக் கூடியது. சிறிய கப்பல் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்துக்கும் உல்லாசப் பயணம் போய் வர அனுமதிக்க முடியுமா? என்பதையும் வாரியம் பரிசீலிக்க வேண்டும்.
சென்னையில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும் வகையில் ராமேஸ்வரம் போட்மெயில் ரயில் சேவையும், தொடர்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது. தற்போது அந்த சேவையை தொடங்குவது குறித்தும் வாரியம் ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அனுமதி பெற முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை செயலர் தீரஜ்குமார், கடல்சார் வாரிய நிர்வாக இயக்குநர் கே.பாஸ்கரன், நிதித்துறை கூடுதல் செயலர் பிரசாந்த் வடநேரே, மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், சுங்கத்துறை உதவி ஆணையர் எ.வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.