Published : 09 Feb 2016 09:30 PM
Last Updated : 09 Feb 2016 09:30 PM

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வோ அல்லது வேறு எந்த வடிவிலான நுழைவுத்தேர்வோ நடத்த முயற்சி கொள்ளப்பட்டால் அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இளங்கலை, முதுகலை மருத்துவ மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலும், இந்திய பல்மருத்துவ கவுன்சிலும் வெளியிட்ட அறிவிப்பை கடந்த 18.7.2013 அன்று உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.

இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு முன்வைத் ஆட்சேபணைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றனர். எனினும் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்செய்தது. அந்த மறுஆய்வை மனுவை வாபஸ் பெறுமாறு அப்போதைய பிரதமருக்கு கடந்த 28.7.2013 அன்று நான் கடிதம் எழுதினேன். கடந்த 3.6.2014 அன்று தங்களை சந்தித்து அளித்த மனுவிலும் முந்தைய அரசின் நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்து மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற்று உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு கட்டுப்படுமாறு வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் திட்டம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இதர அமைச்சகங்களின் கருத்துகளை கேட்டிருப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

இந்த தகவல்கள், ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் மத்தியில் விரக்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பது எனது தலைமையிலான அரசின் கருத்து. காரணம் இந்த மாணவர்களால் நகர்ப்புறத்து மாணவர்களைப் போன்று பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க இயலாது. நுழைவுத்தேர்வுக்கான தேவையான பாடக்குறிப்புகளையும் அவர்களால் பெற முடியாது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்துசெய்ததன் காரணமாக, படிப்பில் சிறந்த ஏராளமான கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையைப் பொருத்தவரையில், கிராமப்புறங்களில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கும், மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்கும் தமிழக அரசு கூடுதலாக சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், கிராமப்புறங்களில் தேவையான அளவு மருத்துவர்கள் பணியாற்றுவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் படித்து முடிப்பவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் தமிழக அரசு பணியில் பணியாற்ற வேண்டும் என்று அவர்களிடம் உறுதிமொழி பத்திரமும் பெறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தினால் இத்தகைய முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அது ஒன்றுமில்லாததாக்கிவிடும். தற்போது இருக்கின்ற சமூக பொருளாதார சூழலுக்கும் தமிழக அரசின் நிர்வாக தேவைகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, சரியாக அமையாது. பொது நுழைவுத்தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்து அந்த வழக்கு நிலையில் உள்ள நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடுவது முறையாக இருக்காது. அவ்வாறு செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும்.

எனவே, மருத்துவ படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத்தேர்வையோ அல்லது வேறு எந்த வடிவத்திலான தேர்வையோ நடத்த முயற்சி மேற்கொண்டால் தமிழக அரசு அதை கடுமையாக எதிர்க்கும். காரணம், அத்தகைய நடவடிக்கை மாநிலங்களின் உரிமைகளையும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்பட்டு வரும் மாணவர் சேர்க்கை கொள்கைகளை மீறுவதாக அமையும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x