

தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் 56 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறியுள்ளார்.
‘உலக புற்றுநோய் தினம்’ இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டாக்டர் வி.சாந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உலக புற்றுநோய் தினத்தின் இந்த ஆண்டின் மையக்கருத்து ‘நம்மால் முடியும், என்னால் முடியும்’ என்பதாகும். புற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புகையிலை, மது, தீய கொழுப்பு சத்துள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, மாசு கலந்த காற்று, சுத்தமின்மை போன்றவைகள்தான் புற்றுநோய்க்கு காரணம். இதைத் தடுத்தால் புற்றுநோயை 40 முதல் 60 சதவீதம் தடுக்க முடியும்.
நாட்டில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். செலவும் குறையும்.
பரவலாக காணப்படும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். நோயின் வகை, தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்று நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது, சிகிச்சை அளிப்பதற்கு போதுமான தகுதி பெற்ற டாக்டர்கள் மற்றும் வல்லுநர்கள் குறைவாக உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் 80 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டு தோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் மட்டும் 56 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1985-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சம் பெண்களில் 16 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சம் பெண்களில் 35 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 1985-ம் ஆண்டு சென்னையில் ஒரு லட்சம் பெண்களில் 35 பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2013-ம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களில் 16 பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்கள் வயிறு, நுரையீரல் வாய், பெருங்குடல், நாக்கு புற்றுநோய்களாலும் பெண்கள் மார்பகம், கருப்பை வாய், சினைப்பை, வாய், வயிறு புற்றுநோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஆண்களில் 40 முதல் 50 சதவீதம் பேரும், பெண்களில் 15 முதல் 20 சதவீதம் பேரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவமனையின் துணைத் தலைவர் ஹேமந்த்ராஜ், இயக்குநர் சாகர், துணை இயக்குநர் சுவாமிநாதன், பேராசிரியர் டாக்டர் விதுபாலா ஆகியோர் உடன் இருந்தனர்.