

மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, நடப்புக் கல்வியாண்டிலும் பட்டுப்புழுவியல் துறைக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும் என வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 11 இளங்கலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இப்பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரியாகும். இந்த வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்சி பட்டுப்புழுவியல் துறை செயல்பட்டு வந்தது. இதில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வந்தனர்.
நிறுத்தம் செய்ய முடிவு
இந்நிலையில், பட்டுப்புழுவியல் பிரிவுக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மேலும், படிப்பில் சேர்ந்து விலகுபவர்களும் இதில் அதிகம் உள்ளனர். எனவே, கடந்த 5 ஆண்டுகள் இந்த படிப்பில் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்து, 2021-22ஆம் கல்வியாண்டு, 2022-23ஆம் கல்வியாண்டுகளுக்கான சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்த வேளாண் பல்கலைக்கழக கல்விக்குழு நிர்வாகத்தினர் முடிவு செய்திருந்தனர். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு, பட்டுப்புழுவியல் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கடந்த 8-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பட்டுப்புழுவியல் துறைக்கு மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலும் மாணவர்களுக்கு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.
முடிவில் மாற்றம்
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று (செப்.14) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வந்த, பிஎஸ்சி பட்டுப்புழுவியல் துறை சேர்க்கையை இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி, மல்பெரி செடி மற்றும் பட்டுப்புழு பயிரிடக்கூடிய சூழலுக்கு ஏற்ற வேறு இடத்துக்கு இப்பிரிவை மாற்றம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் இறுதியில், கடந்த ஆண்டுகளைப் போல், நடப்புக் கல்வி ஆண்டிலும் பட்டுப்புழுவியல் கல்வி தொடரப்படும். இப்படிப்பை இரண்டாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவு கைவிடப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.