

கனிம லாரிகளுக்கான அனுமதிச் சீட்டில் எண்ணிலும், எழுத்திலும் தேதி, நேரம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் மண்டலக் கல், மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் டென்னிஸ் கோல்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''குவாரிகளில் இருந்து ஒவ்வொரு யூனிட் மணல், கற்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வரியுடன் செலுத்தி லாரிகளில் எடுத்துச் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் லாரியில் ஏற்றிச் செல்லும் கனிமத்துக்கான அனுமதி அட்டையை கன்னியாகுமரி, நெல்லை மாவட்டக் கனிமவள அதிகாரிகள் தருகின்றனர்.
இந்த அனுமதி அட்டைகளைக் கனிமவள அதிகாரிகள் முத்திரையைக் குத்தி, குவாரி உரிமையாளர்களிடம் வழங்குகின்றனர். கனிமங்களை ஏற்றிச் செல்லும்போது அவர்களிடம் இருந்து அனுமதிச் சீட்டை லாரி ஓட்டுநர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
அந்த அனுமதி அட்டையில் லாரி எண், தேதி, நேரம், பயண நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு முறைக்கும் ஒரு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். ஆனால், ஒரே அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி சில லாரிகளில் மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் தேதி, நேரம் விவரங்களை எண்ணிலும், எழுத்திலும் எழுத வேண்டும் எனப் பல்வேறு வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நெல்லை, குமரி ஆட்சியர்கள் பதில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி, ''குவாரிகளில் இருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டில் தேதி, நேரத்தை எண்ணிலும், எழுத்திலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். இதை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மீறும் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.