முதல்வர் அறிவித்த ஊதியம், பதவி உயர்வு அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்கவில்லை: அரசு டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு  

முதல்வர் அறிவித்த ஊதியம், பதவி உயர்வு அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்கவில்லை: அரசு டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு  

Published on

‘‘கைக்கு எட்டியது வாய்க்குக் கிடைக்காமல் தடுப்பதுபோல் அரசு மருத்துவர்கள் ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவிடாமல் அதிகாரிகள் நிறுத்தி வைக்க முயற்சி செய்கின்றனர்’’ என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், மருத்துவர்கள் ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கான பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் (அரசு ஆணை 293) உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தோம். இந்த அரசாணையால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் சிலர் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதையும் சரிசெய்ய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம்.

டாக்டர்களில் ஒரு சில பிரிவினரின் அதிருப்தியைக் கருத்தில் கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் அனைத்துப் பிரிவினரையும் அழைத்துக் கருத்தைக் கேட்டறிந்தார். அவர் முதல்வரிடம் கலந்து பேசி விரைவில் முடிவு தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவின்படி முதல்வர் உத்தரவிட்ட அரசாணை 293 கடந்த 2 மாதமாக நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட ஒரு அரசாணையை நிறுத்திவைக்க அதிகாரிகள் சிலர் முயற்சி செய்வது மிகவும் தவறான போக்காகும். இது கைக்கு எட்டியதை வாய்க்குக் கிடைக்காமல் தடுப்பது போன்ற கொடுஞ்செயலாகும். இதனை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்க்கிறது.

உடனடியாக அரசாணை 293-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் விடுபட்ட பிரிவினர்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆணையிடக் கேட்டுக் கொள்கிறோம்.

கரோனா பேரிடர்க் காலம் ஆரம்பித்ததிலிருந்து பணிச்சுமை மட்டுமில்லாது உறவினர்கள், உடன் பிரிவோர் பலரை மருத்துவர்கள் இழந்துள்ளனர். மேலும், நோய் பாதிப்பு, மன உளைச்சல் மற்றும் உயர் பயத்துடனே பணியைத் தொடர்ந்துள்ளோம். தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட ஊரடங்கு காலத்தில் அவசர சிகிச்சை, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சைகள் அளவுக்கு அதிகமான அளவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன. இடையிடையே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பொழுதெல்லாம் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. எப்போதும் உள்ள சிகிச்சை மற்றும் கரோனா சிகிச்சை என்று ஓய்வின் பணிச் சுமைகளுடன் மருத்துவர்கள் பணிபுரிந்தனர்.

இந்தச் சூழலில் மன உளைச்சலில் உள்ள மருத்துவர்களின் தார்மீக மற்றும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை காணும் பொருட்டு வரும் அக்டோபர் 3-ம் தேதி மதுரையில் மாநிலச் செயற்குழுக்கூட்டம் கூட்டப்பட உள்ளது. இதில், அரசாணை 293-ஐ நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும்.

இந்தக் கூட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா உதவித்தொகை 20,000 - 30,000 வரை இந்நாள் வரை வழங்கப்படாதது குறித்தும், உதவித்தொகைக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சிலரை அதிகாரிகள் பயனாளிகள் பட்டியலில் சேர்க்காதது குறித்தும் ஆலோசிக்க இருக்கிறோம்.

கடந்த ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி மற்றும் விடுப்பு ஒப்படைப்பு பணப் பயன் ஆகியவற்றை 2 ஆண்டுகளாகத் தியாகம் செய்துள்ளோம். மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு விடுப்பு ஒப்படைப்பு பணப் பயனாவது உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்”.

இவ்வாறு டாக்டர் கே.செந்தில் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in