இது ஒரு நாடு; இது ஒரு தேர்வு; சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்: கமல்

கமல்: கோப்புப்படம்
கமல்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் தனுஷ், கனிமொழி என இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த தனுஷ் (19) என்ற மாணவர், ஏற்கெனவே 2019-ல் நீட் தேர்வை எழுதினார். இதில், பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.

2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நீட் தேர்வு நடைபெற்ற அன்று, தனுஷ், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி (17), பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி. இவர், நீட் தேர்வைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 12) எழுதியுள்ளார். எனினும், தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்த கனிமொழி, மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு (செப். 13) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக கவுன்சிலிங் அளிக்கப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (செப். 14) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in