

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு பொறுப் பேற்ற சிமி இயக்கத்தினரிடம் ஒடிசா சென்று தமிழக போலீஸார் வாக்குமூலம் வாங்கினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ம் தேதி பெங்களூரு-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சிறிது நேரதில் அந்த ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிமி இயக்கத்தை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பை தாங்கள் தான் நிகழ்த்தியதாக அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தமிழக போலீஸார் ஒடிசா சென்று அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.