Published : 14 Sep 2021 02:20 PM
Last Updated : 14 Sep 2021 02:20 PM

வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்குக் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்: உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்ட வழக்கை விசாரித்த ஈரோடு தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்துக்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, 'நியூ இந்தியா அஷுரன்ஸ்' கம்பெனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்தது.

வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களைக் குற்றம் சாட்டியிருந்தார்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்துப் புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என, அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பொது காப்பீட்டு கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் திட்டத்தை, காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்றும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்து, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று (செப். 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போதைய சூழலில் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்து, அந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டுவரும் என்று நம்பிக்கை தெரிவித்து, தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x